ஈரோட்டில் கிரெடாய் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீடு, வீட்டுமனை, அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை கண்காட்சியை அமைச்சர் விஜய் பாலாஜி தொடங்கி வைத்தார்.
இந்திய கட்டுமான நிறுவன கூட்டமைப்பான கிரெடாய் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் வீடு, வீட்டுமனை, அடுக்குமாடி குடியிருப்பு கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது 3வது ஆண்டாக ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மகாலில் 40க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் வீடு, வீட்டுமனை, அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை கண்காட்சி இரண்டு நாட்கள் நடத்தப்படுகிறது.
நேற்று நடைபெற்ற துவக்க விழாவில், கிரெடாய் ஈரோடு தலைவர் குமரேசன் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தலைமை தாங்கினார். கிரெடாய் மாநில தலைவர் ஹபீப், இணைசெயலாளர் சதாசிவம், ஈரோடு செயலாளர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கைத்தறி துறை அமைச்சர் எம்.விஜய்பாலாஜி பங்கேற்று, கண்காட்சியை துவக்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார்.
மாதிரி குடியிருப்புகள், தற்போது விற்பனைக்கு இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் விபரம், தனி வில்லா வீடுகள், புதிய கட்டுமானத்திற்கான நவீன கதவுகள், பாரம்பரிய அலங்காரத்தில் கட்டப்படும் மாதிரி குடியிருப்புகள் போன்றவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
*இன்றுடன் கண்காட்சி நிறைவு*
இந்த கண்காட்சி அரங்கிலேயே எளிய நடைமுறைகள் மூலம் உடனடி வங்கி கடன் வசதி வழங்க தனி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சி இன்று (18ம் தேதி) இரவு 8 மணிக்கு நிறைவடைகிறது.